Total Pageviews

Sunday, August 31, 2014

BACK TO TENKASI: மீண்டும் தென்காசியில்

குழந்தைகளை  நிறைய படிக்கவைக்க வேண்டும், வேலைக்கு அமெரிக்காவுக்கு அனுப்பவேண்டும் என்று கனவு கண்ட பல பெற்றோர்களில் நாங்களும் ஒருவர். தற்பொழுது கடந்த பதினான்கு ஆண்டுகளாக இரண்டு குழந்தைகளுமே அமெரிக்காவில். நாங்கள் இங்கொரு காலும் அங்கொரு காலுமாக ஓட்டிக்கொண்டிருக்கிறோம். ஆகாயவிமானங்கள் லாபகராமாக ஓடுவதற்கு ஆண்டுதோறும் அமெரிக்கா செல்ல டிக்கெட் வாங்கி எங்களாலான உதவியை செய்து வருகிறோம். அங்கே இருக்கும்பொழுது இந்தியா, தென்காசி நினைப்புதான். எப்படா தென்காசி திரும்பப்போகிறோம் என்று துடிப்பு, நமக்காகக் இங்கே ஏதோ காத்துக்கொண்டிருப்பதுபோல.

இந்த ஆண்டும் மார்ச் மாதம் இத்தாலியில் ஒரு பத்து நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா சென்ற நாங்கள், இருபத்தி நாலு மணி நேரமும் ஒரே மாதிரி 74 டிகிரி ஃபாரன்ஹீட் சூட்டில் இருந்துவிட்டு 23-ஆம் தேதி, சனிக்கிழமை சென்னையில் இறங்கியவுடன் முதலில் தேடியது எங்களுடைய கைக்குட்டையைத்தான், முகத்திலும் கழுத்திலுமுள்ள வேர்வையையும் அழுக்கையும் துடைப்பதற்கு. அன்று மாலையே சென்னையைவிட்டு தென்காசிக்கு ஓடி வந்துவிட்டோம். சென்னை பிடிக்காமல்தான் சென்னையிலுள்ள தனி வீட்டை வாடகைக்குக் கொடுத்துவிட்டு, தென்காசியில் ஒரு வாடகை வீட்டை ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பிடித்தோம்.

தென்காசி எவ்வளவோ மாறியிருக்கிறது. இல்லை வளர்ந்திருக்கிறது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுவார்கள்.  இங்கு வந்த பின் ஒரு வார இடைவேளையில்  நாங்கள் பார்த்ததில் என்னென்ன மாறியிருக்கிறது என்று யோசித்தேன்      

  • வந்திறங்கிய மூன்று நான்கு நாட்களுக்கு வெயில் மதிய நேரத்தில் கொளுத்தியெடுத்தது. குற்றாலத்தில் சீசன் ஏறக்குறைய முடிந்துவிட்டதாகச் சொன்னார்கள். எங்கு பார்த்தாலும் வாகனங்கள். தென்காசி-குற்றால நெடுஞ்சாலையில் நடக்க முடியவில்லை. பல வாகனங்கள் இந்தச் சாலையை சோழவரம் ரேஸ் கோர்ஸாகத்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இரண்டு சக்கர மோட்டார் வாகனங்களுக்கு எந்த அடிப்படை விதிமுறைகளும் கிடையாது. வண்டியின் வேகம் குறைந்துவிடாமல் பார்த்துக்கொள்கிறார்கள். எதிரே வரும் வண்டிக்காரர்தான் பார்த்துப் போய்க்கொள்ள வேண்டும். நடைபாதையைக்கூட (அப்படி ஒன்று இருந்தால்) விட்டு வைப்பதில்லை.
  • தென்காசி பெரிய கோவிலைச் சுற்றி நான்கு ரத வீதிகளிலும் ஒரே வாகனங்கள் மயம். நடப்பதற்கும் நிற்பதற்கும் இடமில்லை. மூன்று ரத வீதிகளில் ஒரு ஆண்டுக்கு முன்னேதான் சிமெண்ட் ரோடு போட்டார்கள். இப்பொழுது பல இடங்களில் குழிகள். எப்படி என்று தெரியவில்லை. இருக்கக்கூடிய சின்னச்சின்ன இடங்களில் பல புதிய ஷோரூம்கள். எல்லாம் துணிக்கடைகள், டி.வி, நகைக் கடைகள். பணப்புழக்கத்திற்கு குறைவில்லை போலும். யானைப் பாலம் சந்திப்பில் சந்திரனில் உள்ள குழிகள் போல் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான குழிகளை பத்திரமாக பாதுகாத்து வருகிறார்கள். எது எதெற்கெல்லாமோஆண்டு விழா கொண்டாடுகிறார்கள். இந்தக் குழிகளுக்கும் கொண்டாடலாமே? இதைப் பாதுகாத்த அதிகாரிகளுக்கும், நகர சபை வார்டு கௌன்சிலர்களுக்கும், தலைவருக்கும், தற்போதைய சட்டசபை உறுப்பினருக்கும் விழா எடுத்து கௌரவிக்கலாமே? இவ்வளவுக்கும், எதிரிலேயே பழைய சட்டசபை உறுப்பினர் நிதியில் கட்டிய ஒரு பொதுக் கட்டிடம் வேறு. மூன்று ரதவீதிகளுக்கு சிமெண்டு ரோடு அமைத்த நகரசபைக்கு, தெற்கு மாசி மீது என்ன கோபமோ தெரியவில்லை. அதை மட்டும் இன்னும் விட்டு வைத்திருக்கிறார்கள். தென்காசி மக்களுடைய பொறுமைக்கும் ஒரு விழா எடுக்கலாம்.
  • ரயில்வே மேம்பாலம் ஒரு அசுர மலைப்பாம்பு போல பயமுறுத்துகிறது. பாலத்தில் ஏறும், இறங்கும் இடங்களில், இரண்டு சக்கிர வாகனங்களை எந்தப் பக்கம் வேண்டுமானாலும் ஓட்டிக்கொண்டு போகலாம். யாரும் கேள்வி கேட்க முடியாது. ரயில் நிலையத்திலிருந்து மேம்பாலம் முடியும் பெட்ரோல் பங்க் பக்கம் காரை ஓட்டிக்கொண்டு வந்தால், ஓட்டுபவருக்கு குறைந்தது நான்கு கண்கள் வேண்டும். எந்தப் பக்கத்திலிருந்து மோட்டர் சைக்கிள் வருமென்று சொல்ல முடியாது. மேம்பாலத்தில் போட்ட விளக்குகள் வேலை செய்யவில்லை என்று தினமலர் பேப்பரில் போட்டிருந்தார்கள். ஒரு ஆண்டுகூட நிறைந்திருக்காது என்று நினைக்கிறேன். ரயில் நிலையத்துக்கு சென்றடையும் பாலத்துக்கு மிக அருகே பாதையை, ஒரு புராதனச் சின்னமாக அறிவிக்கலாம். நம்மை ஒரு நூறு ஆண்டுகளுக்கு பின்நோக்கி எடுத்துச் செல்லும். அவ்வளவு குழிகள். ரயில் நிலையமோ புத்தம் புதியதாக மிக அருமையாக இருக்கிறது. இந்தப் பாதை மட்டும் என்ன பாவம் செய்தது என்று தெரியவில்லை.
  • புராதனச் சின்னங்களாகச் சேர்க்க தகுதி பெற்ற இன்னொரு பாதை மின்னகரிலிருந்து இலஞ்சி குமாரர் கோவில் செல்கிறது. ஒரு பாதை புதியதாகப் போட்டால் ஒரு வருடம் கூடத் தாக்குப்பிடிக்கக்கூடியதாக இல்லாமல் எப்படி செய்வது என்பதை நமது காண்டிராக்டர்களையும், இந்த வேலையை மேற்பார்வையிட்ட அதிகாரிகளிடமும்தான் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும். முனைவர் பட்டத்துக்கு ஒரு ஆய்வுத் தலைப்பாகக்கூட இந்த விஷயத்தை எடுத்துக்கொள்ளலாம். இப்படி இன்னும் சில பாதைகள் ஒரு வருடத்துக்குள்ளேயே காலி. பழி மழை மேலே.
  • சென்னையில் ஆட்டோக்காரர்கள் எல்லாம் திருந்தி வருவதாகச் செய்தி. மீட்டர் போட்டுதான் ஓட்டுகிறார்கள் என்றும் கேள்வி. அவர்கள் விட்ட பழக்கம் இப்பொழுது தென்காசி போன்ற சின்ன நகரங்களுக்குப் பரவிவிட்டது போல. சென்னையிலிருந்து திரும்பி தென்காசியில் பஸ்ஸை விட்டு இறங்கியவுடன் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு ஆட்டோக்காரர் வாய் கூசாமல் எழுபது எண்பது ரூபாய் கேட்டார். ஓட்டுபவருக்கு ஒரு அலட்சியம் வேறு. மரியாதையில் முன்னேறிக்கொண்டிருக்கிறோம்.
  • ஆட்டோவெல்லாம் கட்டுப்படியாகாது என்பதனாலோ என்னவோ, மோட்டர் சைக்கிளையே ஒரு டெம்போ வண்டி போல பயன்படுத்த மக்கள் பழகிக்கொண்டுவிட்டார்கள் என்று நினைக்கிறேன். பெரிய பெரிய  நீளமான இரும்புக் கம்பிகள், குழாய்கள் எல்லாமே மோட்டார் சைக்கிளில் பின் பக்கமாக உட்கார்ந்திருப்பவர்கள் வெகு லாவகமாக தோளில் சுமந்துகொண்டு செல்கிறார்கள்.
  • தென்காசி-குற்றாலம் சாலையில் இன்னமும் மாடுகளை அதன் இஷ்டம் போல மேய்ப்பதற்கு கூட்டிக்கொண்டு போகிறார்கள். மேய்ப்பவர் பின்னால் எங்கேயோ வந்துகொண்டிருப்பார். வாகனங்கள் ஓட்டுபவர்கள் எப்படியோ இந்த மாடுகள் மீது மோதிவிடாமல் ஓட்டிச்சென்று விடுகிறார்கள். நமது ஓட்டுனர்களுக்கும் ஒரு பாராட்டு விழா எடுக்கலாம்.
  • தென்காசியில் நாங்கள் வசிக்கும் பகுதி வெறிச்சோடிக் கிடக்கிறது. பல இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலைக்கு சென்னை, பங்களூரு என்று போய்விட்டார்கள். சிலர் மேற்படிப்பிற்காக வேறு ஊர்களுக்குப் போய்விட்டார்கள். நாங்கள் வந்த புதிதில் (2006-07) இந்தத் தெரு எப்பொழுதும் கலகலவென்றிருக்கும். பல சிறுவர்களும், சிறுமிகளும் மாலையில் தெருவில் விளையாடிக்கொண்டிருப்பார்கள். நாங்கள் இங்கு வந்ததிலிருந்து இந்த இளைஞர்கள்தான் எங்களுக்கு நண்பர்களாகவும் பக்கபலமாகவும் இருந்தார்கள். இப்பொழுது ஒரு கையொடிந்தது போலத் தோன்றுகிறது. மற்ற சிறுவர்கள் இருக்குமிடம் தெரியவில்லை. வினாயகர் சதுர்த்திக்கு எல்லோரும் வந்திருக்கிறார்கள். அவர்களை மீண்டும் பார்த்துப் பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே சமயம், அவர்களும். அவரவர்கள் வாழ்க்கையில் வளர்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதும் மனதுக்கு சந்தோஷமாகத்தான் இருக்கிறது.
  • இன்னுமொரு CBSE  பள்ளி திறந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். மகிழ்ச்சி. கல்விக்கு மிகப் பெரிய முக்கியமான ஒரு நகரமாக தென்காசியும் அதன் சுற்று வட்டாரமும் வளர்ந்து வருவது ஒரு நல்ல சேதிதான். அறிவையும் திறமைகளையும் வளர்க்கச் சொல்லிக்கொடுக்கும் அதே நேரத்தில் குழந்தைகளுடைய மனப்பான்மையையும் சரியாக வளர்க்க இந்தப் பள்ளிகள் உதவி செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
  • வடை சுடும் கடைகள் அமோகமாக விற்பனை செய்து வருகின்றன. வினாயகா மெஸ்ஸில் எல்லா உணவுக்கும் விலையை தாராளமாகக் கூட்டி விட்டார்கள். என்ன செய்வது? ஆறு மாதம் கழித்து  நான் சாப்பாட்டுக்கு பச்சரிசி வாங்கப் போனால், நல்ல அரிசி கிலோவுக்கு ஐம்பத்தேழு ரூபாய் விலை சொல்கிறார் கடைக்காரர். ஒரு பெரிய நோட்டு எடுத்துக்கொண்டு போனால் ஒரு சிறிய பையில் காய்கறி வாங்கிக்கொண்டு வர முடிகிறது. அதுவும் இரண்டு நாட்களுக்குத்தான் வருகிறது.
  • இரண்டு மூன்று அரசு அலுவலகங்களுக்குப் போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அரசு அதிகாரிகள் உதவும் தன்மையோடு நன்றாகவே நடந்துகொண்டார்கள்.
  • ஒரு பொது நல வழக்கில் உயர்நீதி மன்றத்தில் கொடுக்கப்பட்ட தீர்ப்புக்குப் பிறகு, குற்றால அருவிகள் சுற்றியுள்ள பகுதிகள் முன்னைவிட சுத்தமாக இருப்பதாகப் பேச்சு. இன்னும் போய் பார்க்க முடியவில்லை.
  • தென்காசி வளர்ந்து வரும் வியாபரத்தலமாகவும் கல்வி மையமாகவும் மாறிக்கொண்டிருக்கிறது. விரைவில் ஒரு மாவட்டத் தலைமையகமாக மாறக்கூடும் என்று பேச்சு. விளை நிலங்கள் எல்லாம் கட்டிடங்களுக்காக விற்பனயாகிக் கொண்டிருக்கின்றன. ஆண்டு முழுவதும் வீசிக்கொண்டிருந்த காற்றைக் காணோம். (கடந்த இரண்டு நாட்களாக மழை. அதனால் குளுகுளுவென்றிருக்கிறது) பல பசுமையான இடங்களையும் காணோம்.  

எப்படியிருந்தாலும்,………………………..


தென்காசி தென்காசிதான். குற்றாலம் குற்றாலம்தான், செங்கோட்டை செங்கோட்டைதான். தென்காசியே உன்னை நான் நேசிக்கிறேன். ஆராதிக்கிறேன். மீண்டும் இங்கு திரும்பி வந்ததில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சிதான். அவலங்களும் வாழ்க்கையில் ஒரு பகுதிதான் என்பதை ஏற்றுக்கொண்டு உன் அழகை மட்டும் பார்த்து வாழ்க்கையை ரசிக்கக் கற்றுக்கொண்டு வருகிறேன். எங்களுக்கு ஒரு இடம் கொடுத்ததற்கு நன்றி.

Thursday, August 21, 2014

பருத்தியின் கதை

பருத்தியின் கதை

முன்னுரை

இலை, தழைகளை உடம்பில் சுற்றிக்கொண்டு, காய், கனிகளை பச்சையாக உண்டு காடுகளில் சுற்றித்திரிந்து வந்த மனித குலத்தை இன்றைய நாகரீகத்துக்கு எடுத்து வந்ததில் பருத்தி ஆடைக்கு மிகப்பெரிய பங்குண்டு. பருத்திச் செடிகளிலில் உண்டாகும் விதைகளின் மேற்பாகத்தில் பாதுகாப்பாக மூடியிருக்கும் ஒரு கூட்டில் வளர்ந்திருக்கும் மென்மையான மயிர்கொத்து போன்ற, செல்லுலோஸால் ஆன ஒரு இழைதான் பருத்தி. இயற்கையாகவே இந்த கூடுகள் காற்றில் பறந்தும், மற்றும் பல வழிகளிலும் தன் விதைகளை பரப்பச்செய்யக்கூடிய தன்மையுடையவை. விதவிதமான பருத்திப் பயிர்கள் மிக அதிக அளவில் மெக்சிகோவிலும், ஆஸ்திரேலியாவிலும் மற்றும் ஆஃப்ரிக்காவிலும் காணப்படுகின்றன.

இயற்கையாக கிடைக்கும் இழைகளில் பருத்தி மிக முக்கியமானது. 25 கோடி மக்களின் வயிற்றுப் பிழைப்பை பருத்தித் தொழில் காப்பாற்றி வருகிறது. இன்று உலகம் முழுவதும் 25 மில்லியன் டன் அளவுக்கு (110 மில்லியன் மூட்டைகள்) பருத்தி ஆண்டுதோறும் உற்பத்தியாகிறது. உலகிலேயே மிக அதிகமாக பருத்தியை ஏற்றுமதி செய்யும் நாடு அமெரிக்கா. சைனா தன் உற்பத்தியை உள்நாட்டிலேயே பயன்படுத்திக்கொள்கிறது. ஒரு பருத்தி மூட்டை என்பது 17 கன அடி அளவும் 500 பௌண்ட் எடையும் கொண்டது.

பருத்தியின் சரித்திரம்

எப்பொழுதிலிருந்து பருத்தி பயன்பாட்டில் இருந்து வந்திருக்கிறது என்பது சரியாகத் தெரியவில்லை. மெக்ஸிகோ நாட்டிலுள்ள சில குகைகளை ஆராய்ச்சி செய்யும்பொழுது 7000 ஆண்டுகள் பழமையான, பருத்தியால் செய்யப்பட்ட பொருட்களையும் பருத்தித் துணிகளின் துண்டுகளையும் கண்டிருக்கிறார்கள். பாகிஸ்தான் பகுதியில் சிந்து சமவெளி பள்ளத்தாக்கில் சுமார் 3000 ஆண்டுகளூக்கு முன்பேயே பருத்தி உற்பத்தி செய்ததற்கும், பருத்தியிலிருந்து நூலெடுத்து ஆடைகளாகத் தயாரிக்கப்பட்டிருந்ததற்கும் ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. அதே காலங்களில் எகிப்து நாட்டில் நைல் பள்ளத்தாக்கில்  பருத்தி ஆடைகள் அணிந்திருந்திருக்கிறார்கள் என்பதற்கான சான்றுகளும் கிடைத்திருக்கின்றன. அரபுநாட்டு வியாபாரிகள் பருத்தியை ஐரோப்பாவுக்கு கி.பி 800-களில் எடுத்துச்சென்று விற்றிருக்கிறார்கள். 1492-ல் அமெரிக்காவுக்கு வந்த கொலம்பஸ் பஹாமா தீவுகளில் பருத்தி விளைந்திருப்பதைக் கண்டிருக்கிறார். சுமார் கி.பி 1500-ல் உலகம் முழுவதும் பருத்தியை ஆடைகளுக்காக பயன்படுத்தியிருக்கிறார்கள். அமெரிக்காவில் 1556-ல் ஃப்ளோரிடாவிலும், 1607-ல் விர்ஜீனியாவிலும் பருத்தியை பயிரிடத் தொடங்கியிருக்கிறார்கள். 1730-ல்  முதன் முதலாக இங்கிலாந்தில் பருத்தியை இயந்திரங்களின் உதவியால்  நூற்றிருக்கிறார்கள்.

1793-ல் அமெரிக்காவில் மஸாச்சுஸெட்ஸ் என்ற இடத்தில் வசித்துவந்த எலி விட்னி என்பவர் பருத்தியை பிரித்தெடுக்கும் ஜின்னிங் இயந்திரத்தை கண்டுபிடித்திருக்கிறார். ஜின்னிங் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு பருத்தி உற்பத்தி மிக அதிக அளவில் வளர்ந்தது. பத்து வருடங்களில் அமெரிக்காவின் பருத்தி உற்பத்தி 150000 டாலர் மதிப்பிலிருந்து 8 மில்லியன் டாலர் அளவுக்கு வளர்ந்தது.

பருத்தியின் பயன்கள்

பருத்தியிலிருந்து நெய்யப்பட்ட துணிகளை நாம் பல விதங்களில் சொந்த உபயோகத்திற்கும் தொழிற்சாலைகளின் உயயோகத்திற்கும் பயன்படுத்துகிறோம்.  துணிமணிகள் உற்பத்தியைத் தவிர மீன் வலை, காஃபி வடிகட்டிகள், கூடாரங்கள், வெடிமருந்துகள், காகிதம் போன்ற மற்ற பல தொழில்களிலும் பருத்தி பயன்படுகிறது.

பருத்திப் பயிரின் எல்லா பாகங்களும் ஏதோ ஒரு விதத்தில் பயனுள்ளதாக இருக்கின்றன. முக்கியமாக, பருத்திக் கொட்டையின் நுனியில் வளர்ந்திருக்கும் குறுகிய நீளமேயுள்ள இழைகள் (லின்டுகள்) பிளாஸ்டிக் தயாரிப்பிலும், வெடிமருந்துகள் தயாரிப்பிலும் தேவையான செல்லுலோஸை கொடுக்கிறது. இந்த இழைகள் உயர் ரக காகிதம் தயாரிப்பிலும், மெத்தை, படுக்கை வகைகளிலும் பயன்படுகிறது.

பருத்திக்கொட்டையை பிழிந்தெடுத்து எண்ணெய், மாட்டுத்தீவனம், மீன்களுக்கான உணவு, உமி போன்றவற்றை தயாரிக்கிறார்கள். பருத்திச் செடியின் தண்டு, இலை போன்றவை உரமாகவும் பயன்படுகின்றன.

பருத்திப் பயிருக்குத் தேவையான பருவ நிலை

பருத்திப் பயிருக்கு நீண்டகால, பனியில்லாத, வறண்ட பருவநிலையும், அதிக அளவு சூரிய வெளிச்சமும், சுமாரான மழை நீரும் தேவைப்படுகிறது. விளைவிக்கும் மண் கனமானதாக இருக்க வேண்டும். பொதுவாக வறண்ட, பூமியின் வடக்கிலும் தெற்கிலும் உள்ள வெட்பமண்டலப் பகுதிகள் பருத்தி விளைச்சலுக்கு உகந்தவை. தற்போது மழை குறைவான பகுதிகளில்கூட நீர்ப்பாசன வசதி மூலமாக பருத்தியை உற்பத்தி செய்கிறார்கள். பொதுவாக உப்பையும், வறண்ட பருவநிலைகளையும் பருத்தி தாங்கிக்கொள்வதால், உலர்ந்த, வறண்ட பகுதிகளில் பருத்தி உற்பத்தி செய்வது வழக்கமாகியிருக்கிறது.

பருத்தியை மிக அதிகமாக உற்பத்தி செய்யும் நாடுகள்: சைனா, இந்தியா, வட அமெரிக்கா, பாகிஸ்தான், பிரேசில். பிற நாடுகள் உஜ்பெகிஸ்தான், ஆஸ்திரேலியா, துருக்கி. மற்றும் துருக்மெனிஸ்தான்.

ஜின்னிங் இயந்திரத்தின் கதை:

பருத்தி தொழிலின் வளர்ச்சியில் ஜின்னிங் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டது ஒரு முக்கியமான கட்டம். பருத்திப் பயிரின் அறுவடைக்குப் பிறகு பருத்தியையும் பருத்திக்கொட்டையையும் பிரிப்பதற்கு இந்த இயந்திரம் உதவுகிறது.  14-ஆம் தேதி மார்ச், 1794-ல் அமெரிக்கத் தொழிற்ப்புரட்சி காலங்களில் எலி விட்னி என்பவர் இதைக் கண்டுபிடித்தார். இந்த இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டபின் வட அமெரிக்காவின் தெற்குப் பகுதிகளில் பருத்தித் தொழில் மிக வேகமாக வளர்ந்தது என்றாலும் பருத்தியைப் பொறுக்குவதற்கு மிக அதிகமாக கூலியாட்கள் தேவைப்பட்டதால் அடிமைத் தொழில் தழைப்பதற்கும் காரணமாகியது.  ஜின்னிங் இயந்திரம் பருத்தியின் சரித்திரத்தை மாற்றியமைத்தாலும் அதைக் கண்டுபிடித்த  விட்னி அவரின் கண்டுபிடிப்பால் மிகப் பெரிய லாபம் எதையும் அடையவில்லை. பிற்பாடு ஏற்பட்ட தொழில்நுட்ப முன்னேற்றங்களால் ஜின்னிங் இயந்திரத்தின் வடிவமும் பயன்பாடும் பல விதங்களில் மாறிவிட்டது. பருத்தியையும் கொட்டையையும் பிரிக்க மட்டுமே பயன்படுத்தப்பட்ட இந்த இயந்திரம் பருத்திப் பஞ்சை சுத்தம் செய்வதற்கும் அதைப் பொதிகளாகக் கட்டுவதற்கும்கூட தற்பொழுது பயன்படுகிறது.

பருத்திக்கொட்டை:

பருத்திப் பயிரை ஜின்னிங் இயந்திரத்தைக்கொண்டு அறுவடை செய்யும்பொழுது பருத்திப் பஞ்சை விட பருத்திக்கொட்டை மிக அதிகமாக கிடைக்கிறது. 480 பௌண்டு எடையுள்ள ஒரு பொதியை தயாரிக்கும்பொழுது, சுமார் 700 பௌவுண்ட் எடையுள்ள  பருத்திக்கொட்டை கிடைக்கிறது. 1980-களில்தான் பருத்திக்கொட்டை மிருகங்களுக்கு ஒரு நல்ல தீவனமாகக் கண்டறியப்பட்டது. கொட்டையின் விதையில் புரத சத்தும், அதன் மேல்தோலில் காணப்படும் மெல்லிய முடிபோல இருக்கும் நூலில் ஃபைபர் சத்துக்கான செல்லுலோஸும் கிடைக்கிறது.
பால் உற்பத்தியாளர்கள் பருத்திக்கொட்டையை சத்துள்ள ஒரு மாட்டுத்தீவனமாக பயன்படுத்துகிறார்கள். கொழுப்புச்சத்து மிகுந்த பால் உற்பத்தியும் அதிகமாகிறது.  பருத்திக் கொட்டையை தீவனமாக அப்படியே மற்ற தீவனங்களோடு சேர்த்துக் கொடுத்துவிடலாம்.

பருத்தித் தொழிலின் வளர்ச்சி

18-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் நடந்த தொழிற்புரட்சியின் போது, பருத்தி ஏற்றுமதிக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. 1738-ல் இங்கிலாந்தில் பர்மிங்காமைச் சேர்ந்த லூயிஸ் பால் மற்றும் ஜான் வயட் என்ற இருவரும் ஒரு உருளை நூற்பு இயந்திரத்திற்கு காப்புரிமை பட்டயம் பெற்றனர். எலி விட்னி 1793-ல் ஜின்னிங் இயந்திரத்தைக் கண்டுபிடித்த பின்பு பருத்தித் தொழில் மேலும் முன்னேற்றம் கண்டது. இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் நகரம் பருத்தி தொழிலுக்கு மிகப் பிரபலமானது.  லன்காஷேர் நகரம் துணிகள் உற்பத்திக்கு மிகப் பிரபலமானது. இங்கிலாந்தின் கப்பல்கள் மூலமாக அவர்கள் காலனியாட்சியில் இருந்த இந்தியா, மேற்கு ஆப்பிரிக்கா, சைனா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது. 1840-வாக்கில் இந்தியாவால், தொழில்மயமாக்கப்பட்ட இங்கிலாந்திற்குத் தேவையான பருத்தியை ஏற்றுமதி செய்யமுடியவில்லை. அமெரிக்காவில் விளைந்த உயர்ரகப் பருத்தியின் போட்டியும் இருந்ததால் இங்கிலாந்தின் வியாபாரிகள் அமெரிக்காவிலும் கரீபியன் தீவுகளிலும் பருத்தித் தோட்டங்களிலிருந்து பருத்தியை நேரடியாக வாங்கத் தொடங்கினர்.

அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது, அமெரிக்காவின் தென் மானிலங்கள் தங்களை அங்கீகரிக்க இங்கிலாந்தை நிர்பந்தப்படுத்துவதற்காக பருத்தி ஏற்றுமதியை தடை செய்தனர். அதனால் இங்கிலாந்தும் ஃப்ரான்ஸும் எகிப்தின் பருத்தியை வாங்கத்தொடங்கினர். மிகப்பெரிய அளவில் முதலீடும் செய்தனர். ஆனால், அமெரிக்காவின் உள்நாட்டுப் போர் முடிந்த பிறகு இங்கிலாந்து, ஃப்ரான்சு நாட்டு வியாபாரிகள் எகிப்தின் பருத்தியை கைவிட்டுவிட்டு மீண்டும் விலை குறைவான அமெரிக்க பருத்திக்கு மாறினர். இதனால், 1865-ல் எகிப்து அரசு திவாலானது.

அதே நேரத்தில், இந்தியாவில் பருத்தியின் உற்பத்தியை பன்மடங்கு உயர்த்துவதற்கான ஏற்பாடுகளையும் இங்கிலாந்து செய்தது. மேலும் இந்தியாவிலேயே பருத்தி துணி தயாரிப்பதை தடை செய்தும் வரிகளைக் கூட்டியும் இந்தியா அதிக அளவில் துணி உற்பத்தி செய்யமுடியாத ஒரு நிலையைத் தோற்றுவித்ததுஇந்தியாவிலிருந்து இழைகளை இங்கிலாந்துக்கு எடுத்துச் சென்று லன்காஷயரில் துணியாக்கி மீண்டும் இந்தியாவுக்கே அதிக லாபத்தில் விற்றது. இதை மஹாத்மா காந்தி கடுமையாக எதிர்த்துப் போராடினார்.

அமெரிக்காவிலோ, தென்மானிலங்களில் அடிமைகளை வேலைவாங்கி உற்பத்தி செய்த பருத்தி வட மானிலங்களில் இருந்த வியாபாரிகளை கொழுத்த பணக்காரர்களாக்கியது. 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இயந்திரமயமாக்குதலால் பருத்தித் தொழிலில் வேலைவாய்ப்புக்கள் வேகமாக வீழ்ந்தன. இன்றும் அமெரிக்காவின் தென் மானிலங்கள் உலகளவில் மிகப் பெரிய ஏற்றுமதி மையங்களாக இருக்கின்றன. உலகளவில் அமெரிக்காவின் நீள வகையான பருத்திதான் விற்பனையில் முன்னணியில் நிற்கிறது.

பூச்சிக்கொல்லி:

உலகிலேயே மிக அதிகமாக, பூச்சிகளுக்கு அடிமையாகும் பயிர்களில் பருத்தியும் ஒன்று. ஏழை நாடுகளில், விவரம் அறியாமல் மிக அதிகமாக பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்துவதின் எதிர் விளைவுகளில் ஒன்று: பல இடங்களில் உணவுப்பொருட்கள் மீதும் இந்த மருந்துகள் அடிக்கப்பட்டு அதை உட்கொண்டவர்கள் துர்மரணம் எய்தது முக்கியமானது. இதைத் தவிர குழந்தை பிறப்பிலே ஏற்படும் பல கோளாறுகளும் விஷம் கலந்த உணவு உண்பதால் ஏற்படும் பிற தீவிர விளைவுகளும் அடங்கும். பருத்திக்கு இயற்கை உரங்களையும் பயன்படுத்தலாம்தான். ஆனால், பயிரடப்படும் நிலம் குறைந்தது மூன்று வருடங்களுக்கு எந்தவிதமான ரசாயனப் பொருட்களும் பயன்படுத்தாத இடமாக இருக்க வேண்டும். இந்த மூன்று வருடங்களில் உற்பத்தி 50 சதவிகிதமாவது குறைந்துவிடும். மேலும் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி விளையும் பருத்திக்கு கிடைக்கும் 20 சதவிகித உயர் விலையும் கிடைக்காது.

பி.டி.பருத்தி:

பருத்திச் செடியை பல பூச்சிகள் எளிதாகத் தாக்க முடிவதால் பொதுவாக பூச்சிக்கொல்லிகள், செயற்கை உரங்கள், களைக்கொல்லிகளை மிக அதிகமாக பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டைத் வெகுவாகத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டது (மரபணு மாற்றப்பட்ட) ஜி.எம் பருத்தி என்று கூறுகிறார்கள். மரபணுகோடிங்முறையில் இயற்கையாகவே தன் திசுக்களில் பூச்சிக்கொல்லியை உற்பத்தி செய்துகொள்ளும் தன்மை பி.டி.பருத்திக்கு உண்டு. இதனால், பெரும்பாலான பகுதிகளில் பருத்தியைத் தாக்கும் ஆர்லேபிடொப்டெரான் என்ற பூச்சி கொல்லப்படுகிறது. இருந்தும், சில பூச்சிகளுக்கு இன்னும் மருந்து பயன்படுத்தவேண்டியிருக்கிறது.

இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தியின் உற்பத்தி 2002-ல் 50000 ஹெக்டேராக இருந்தது. 2011-ல் 10.6 மில்லியன் ஹெக்டேராக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் பருத்தி 12.1 மில்லியன் ஹெக்டேரில் வளர்க்கப்படுகிறது (2011) இதனால் மிக அதிகமான  நிலப்பரப்பில் ஜி.எம்.பருத்தி உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா இருக்கிறது.   இதனால் பருத்தி விளைவிக்கும் விவசாயிகளின் வாழ்க்கைத்தரம், லாபம், உற்பத்தி எல்லாமே உயர்ந்திருப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன
பருத்தித் தொழிலுக்குப் போட்டி:
1890-களில் ரேயான் இழையை உருவாக்கும் முறை ஃப்ரான்ஸ் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இயற்கையாகக் கிடைக்கும் செல்லுலோஸிலிருந்து ரேயான் எடுக்கப்படுகிறது. ரேயான் செயற்கை இழையல்ல. ஆனால், இதை தயாரிக்க ஒரு விரிவான செயல்முறை தேவைப்படுகிறது. ரேயான் இழையைத் தொடர்ந்து செயற்கையாக ரசாயனப் பொருட்களிலிருந்து இழை தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 1924-ல் அசிடேட் இழை அறிமுகப்படுத்தப்பட்டது. 1936-ல் டியூபோன்ட்  என்ற அமெரிக்க நிறுவனம் பெட்ரோலிய ரசாயனப் பொருட்களிலிருந்து நைலான் இழையைத் தயாரிக்கும் முறையை அறிமுகப்படுத்தியது. 1944-ல் அக்ரைலிக் இழையையும் அறிமுகப்படுத்தியது.  1950-களில் பாலியெஸ்டரும் அறிமுகப்படுத்தப்பட்டபோது பருத்தி ஆடைகளுக்கு கடுமையான போட்டி ஏற்ப்பட்டது.   1960-களுக்குப் பிறகு பாலியெஸ்டரின் பயன்பாடு மிகப் பரவலாகி பருத்தி ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு மிகப் பெரும் சவாலாக இருந்தது. நிகாராகுவா போன்ற மத்திய அமெரிக்க நாடுகள் மிகப் பெரிய பொருளாதார சிக்கலில் மூழ்கின. பருத்தி உற்பத்தியில் முதலீடு செய்தவர்களைக் காப்பாற்றும் பொருட்டும், பருத்தி பயன்பாட்டை மேம்படுத்தும் பொருட்டும் பருத்தி ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு திட்டம் அமெரிக்காவில் பருத்தி உற்பத்தியாளர்களால் துவங்கப்பட்டதுஇந்த முயற்சியால் அமெரிக்கா உயர்ரக பருத்தி இழை உற்பத்தியில் இன்றும் முன்னணியில் நிற்கிறது

உலகச் சந்தையில் இன்று பருத்தி:

பருத்தி வியாபாரம் ஊடகச் சந்தையில் ஒரு முக்கியமான வியாபாரப் பொருள்உலகளவில் பருத்தி ஒரு முக்கியமான விளைபொருளாக இருந்தும். வளரும் நாடுகளிலுள்ள பருத்தி உற்பத்தியாளர்களுக்கு தகுந்த விலை கிடைப்பதில்லை, மற்ற வளர்ந்த நாடுகளுடன் போட்டியும் போடமுடிவதில்லை என்ற குறை பரவலாக இருக்கிறது. இதனால் அமெரிக்காவுக்கும் மற்ற பல நாடுகளுக்கும் பன்னாட்டு விவாதம் அடிக்கடி ஏற்ப்படுகிறது. இதில் முக்கியமானது அமெரிக்காவுக்கும் பிரேசிலுக்கும் இடையே ஏற்பட்ட விவாதம்,  

2002 செப்டம்பர் 27 அன்று, அமெரிக்கா அதன் பருத்தி உற்பத்தியாளர்களுக்கு கொடுக்கும் மானியங்களையும், சலுகைககளையும் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று பிரேசில்  நாடு உலக வர்த்தக நிறுவனத்திடம் (WTO)  முறையிட்டது2004, செப்டம்பர் 8 அன்று, அமெரிக்கா தன்னுடைய சலுகைகளை பின்வாங்கிக்கொள்ள வேண்டும் என்று இந்தப் பிரச்சினையை பரிசீலித்த குழு தீர்மானித்தது. அதே நேரத்தில்அமெரிக்காவின் வியாபார உத்திகளை கண்டித்த பெனின், புர்கினா ஃபாசோ, சட், மாலி என்ற நான்கு மிகப் பின்தங்கிய நாடுகள் 2003-ல் நடந்த உலக வர்த்தக பேச்சுவார்த்தைகளில் பருத்தி உற்பத்தியை பாதுகாக்கும் ஒரு முனைப்பை அறிமுகப்படுத்தினர்.

பல வளரும் நாடுகளில் பருத்தியை கைகளாலேயே பறிக்கும் முறை தொடர்ந்து வருகிறது.  அதனால், பருத்தி உற்பத்தியில் சிறார்களைப் பயன்படுத்துவது பற்றியும், பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டால் ஏற்படும் உடல்நலக் கோளாறுகளைப் பற்றியும் சில வளரும், பின் தங்கிய நாடுகளை மற்ற நாடுகள் குறை கூறுகின்றனஇதில் முக்கியமானது உஜ்பெகிஸ்தான் பற்றிய ஒரு குற்றச்சாட்டு. உஜ்பெகிஸ்தான் மிக அதிக அளவில் பருத்தி ஏற்றுமதி செய்யும் ஒரு நாடு. இங்கு பருத்தி சேகரிப்பதற்காக பெரியவர்கள் சிறியவர்கள் என்று பாகுபாடில்லாமல் பலரையும் அதிபர் இஸ்லாம் கரிமோவ் அரசு பலவந்தமாக ஈடுபடுத்தி வருவதாகவும், பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தும் பள்ளி ஆசிரியர்களையும், மாணவர்களையும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களையும் இப்படி பத்து லட்சத்துக்கும் மேலான மக்களை பருத்திக் காடுகளில் குறிப்பிட்ட அளவு இலக்கை எட்டுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்துவதாகவும், உலக நாடுகள் குற்றம் சாட்டுக்கின்றனர். மேலும் பருத்தி ஏற்றுமதியால் கிடைக்கும் லாபத்தை அரசே பயன்படுத்திக்கொள்வதாகவும் மக்களுக்காக அது எதையும் செய்வதில்லை என்றும் குற்றச்சாட்டு. இந்தப் போக்கை எதிர்த்து ஒரு பெரிய கையெழுத்து வேட்டையே உலகளவில் நடந்து கொண்டிருக்கிறது.
பருத்திப் பயிர் பொதுவாக உப்பை ஏற்றுக்கொள்வதால், நீர்ப்பாசன முறைகளில் பல முறைகேடுகள் நடப்பதாகவும் அதனால் உஜ்பெகிஸ்தான் போன்ற நாடுகளில் பாலைவனப் பகுதிகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது..

பருத்தி விதைப்பது, அறுவடை, நூற்பு
பொதுவாக நான்கு வகையான பருத்திச் செடிகள் உண்டு:

1.    மத்திய அமெரிக்கா, கரீபியன் மற்றும் தெற்கு ஃப்ளோரிடா (அமெரிக்கா)வில்   காணப்படும் மேல் நிலத்தில் வளரும் பருத்தி..உலக உற்பத்தியில் இது 90    சதவிகிதம்.)
2.    கூடுதலான நீளமுள்ள இழைகள் கொண்ட பருத்தி. வெட்பமண்டல பகுதிகளான தென் அமெரிக்காவில் காணப்படுகிறது (உலக உற்பத்தியில் 8 சதவிகிதம்)
3.    மரமாக வளரும் பருத்திச் செடிகள் இந்தியாவிலும் பாக்கிஸ்தானிலும் காணப்படுகிறது (2 சதவிகிதத்திற்கும் குறைவு)
4.    தெற்கு ஆப்பிரிக்காவிலும் அரபு நாடுகளிலும் காணப்படும் ஒரு வகை பருத்தி ((2 சதவிகிதத்திற்கும் குறைவு)

பழைய பருத்தி வகைகள் 1900-க்கு முன்பு அதிகமாக பயன்படுத்தப்பட்டன. வெள்ளை, காவி, ஊதா, மற்றும் பச்சை நிறங்களில் பொதுவாக பருத்தி தோன்றினாலும் மரபியல் மாறுதல்களால் வெள்ளைப் பருத்தி பாதிக்கப்படலாம் என்ற பயத்தினால் பருத்தி பயிரிடும் இடங்களை பிரித்து வைக்கிறார்கள்.  

விதைப் பஞ்சை சரியாகப் பாதுகாக்க வேண்டும். மழை காலங்களில் ஈரப்பசை அதிகமானால் பஞ்சின் தரம் குறையும், நிறம் மாறும், அழுகவும் செய்யும். காற்று அதிகமானால் விதைப் பிரிவுகளிலிருந்து பஞ்சை விரியவைக்கும்.  விரிந்த பஞ்சிலிருந்து குறைவான லின்ட்டும், விதைகளுமே கிடைக்கும்.

மரபு வழியாக பயிரிடுபவர்கள், பருத்தி அறுவடையான பின்பு செடியின் தண்டை வெட்டியெடுத்து துண்டு துண்டாக்கிவிடுவார்கள். நிலத்துக்கு அடியிலிருக்கும் பகுதிகளை புரட்டியெடுத்துவிடுவார்கள். சில இடங்களில் தண்டை அப்படியே விட்டுவிடுவார்கள். கோடைகாலத்துக்கு முன்புள்ள இளவேனிற்காலத்தில் பல முறைகளில் பயிரிடுவார்கள். உழுதும், உழாமலும் விதைக்கக்கூடிய முறைகள் நடைமுறையில் இருக்கின்றன. பயிரிட்ட இரண்டு மாதங்களில் பருத்திச் செடிகளில் பூப்பூக்கத் தொடங்குகிறது. இன்னும் மூன்று வாரங்களில் பூ மலரத் தொடங்குகிறது. இதழ்கள் வெள்ளை நிறத்திலிருந்து மஞ்சள், பின்பு ஊதா, இறுதியில் கருஞ்சிவப்பு நிறத்துக்கு மாறுகிறது. இன்னும் மூன்று நாட்களுக்குப் பிறகு இந்தப் பூக்கள் கருகி கீழே விழத்தொடங்குகின்றன. பச்சை நிறத்தில் பருத்திக் குமிழ்கள் வெளியே தெரிகின்றன. இந்தக் குமிழுக்குள்ளே ஈரப்பசையோடு கூடிய பஞ்சு வளரத்தொடங்கி வெளியே தெரிகின்றன. இந்தக் குமிழ்கள் பழுக்கத் தொடங்கிய பிறகு, காவி நிறத்துக்கு மாறுகிறது. சூரிய வெளிச்சத்தில் இந்த பஞ்சு இன்னும் விரிந்துகொடுத்து விதைப் பஞ்சு முழுவதுமாக வெடித்து பஞ்சு வெளியே வருகிறது. வளர்ந்த நாடுகளில் இயந்திரங்களின் மூலமாக அறுவடை செய்கின்றனர். அறுவடை செய்யப்பட்ட பருத்தி ஜின்னிங் இயந்திரம் மூலம் பருத்திப் பஞ்சாகவும், கொட்டையாகவும் தனித்தனியே பிரித்தெடுக்கப்பட்டு வெவ்வேரு செயல்முறைகள் மூலம்  நூலாகவோ, துணியாகவோ, தீவனமாகவோ, எண்ணெயாகவோ மாற்றப்படுகிறது.

முடிவுரை

பருத்தி சம்பந்தப்பட்ட தொழில் இன்றைய உலகில் முன்னணியில்  நிற்கும் ஒரு தொழிலாக விளங்கி வருகிறது. கோடிக்கணக்கான ஆட்களுக்கு வேலை வாய்ப்புகளை கொடுத்திருக்கிறது அமெரிக்காவில் மட்டுமே 120 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள (ஒரு பில்லியன் என்பது இந்திய ரூபாய்க்கு 6000 கோடி) பருத்தி வியாபாரம் நடந்திருக்கிறது.

பருத்தியின் உற்பத்தியை பெருக்குவதற்கும், பருத்தியின் நலத்தை பாதுகாக்கவும், பருத்தி உற்பத்தி செய்யும் மக்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தரமான பருத்தியை எல்லா இடங்களுக்கும் கொண்டுபோய் சேர்ப்பதற்கும் ஆராய்ச்சிகள் இன்னும் தீவிரமாக நடந்துகொண்டிருக்கின்றன.