Total Pageviews

Saturday, October 22, 2016

23.10.16: என்னுடைய இந்த வார நாட்குறிப்பு

23.10.16: என்னுடைய இந்த வார நாட்குறிப்பு

ஒவ்வொரு வாரமும் அந்தந்த வாரத்தில் ஏற்பட்ட சில சுவையான அனுபவங்களைப் பற்றியும் என்னை பாதித்த செய்திகளைப் பற்றியும் எழுத ஆரம்பிக்கலாம் என்று கடந்த வாரம் இந்தத் தொடரை ஆரம்பித்தேன். இது இரண்டாவது வாரம். பார்க்கலாம் எத்தனை வாரங்கள்தான் எழுத முடிகிறது என்று.

கடந்த வாரமும் நான் எழுதி வெளியிட்ட இளைஞர்களுக்கான புத்தகங்களை அறிமுகப்படுத்துவதற்காக பல பள்ளிகளுக்கு விஜயம் செய்தேன். மதுரைக்கு வெளியே சில பள்ளிகளில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பொதுவாக மதுரை நகரத்தில் பெரிய ஏமாற்றமே எனக்குக் கிடைத்தது. மதுரையில் பெரிய பள்ளிகளில் முதல்வரை சந்திப்பது குதிரைக் கொம்பாகவே இருந்தது. இதை அவர்களின் நஷ்டமாகவே நான் கருதுகிறேன்.

திருத்தங்கல் மற்றும் விருதுநகர் சென்று திரும்பும்பொழுது நாலு வழிச்சாலையில் கும்பகோணம் டிகிரி காஃப்பி என்ற விளம்பரப் பலகை என்னை ஈர்த்தது. இந்தப் பலகையை பல இடங்களில் நான் பார்த்திருந்தாலும் எங்கேயும் அந்த காஃபிக்காக நான் நின்றதில்லை. ஒரே ‘ப்ராண்டின்’ பல காஃப்பிக் கடைகள். நல்ல விளம்பர யுத்தி – அமெரிக்காவில் மேக் டோனால்ட், ஸ்டார் பக்ஸ், பர்கர் கிங்  போன்று. எந்தக் கிளைக்குப் போனாலும் ஒரே தரத்தில் உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன. நம்மூர் சரவண பவனும் இதே யுத்தியைத்தான் கடைபிடிக்கின்றனர். காஃபி – சிக்கரி கலந்ததுதான் – நன்றாகவே, சூடாக இருந்தது. பெரும்பாலும், பல ஹோட்டல்களில் காஃபி நமது டேபிளுக்கு வரும்பொழுது ஆறிக் குளிர்ந்திருக்கும். நான் காஃப்பி சாப்பிட்ட இடத்தில் பலர் குடும்பத்தோடு அமர்ந்திருந்தனர். குறைந்தது பத்து – பன்னிரண்டு கார்கள் நின்று கொண்டிருந்தன. காஃபிக் கடையின் ஒரு மூலையில் ஒரு பெண்மணி சுடச் சுட பஜ்ஜி, வாழைப்பூ வடை தயார் பண்ணிக்கொண்டிருந்தார். என் நாக்கைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பஜ்ஜியும், வடையும் மிகச் சுவையாகவே இருந்தன.

இந்த degree coffee- க்கு ஏன் அப்படியொரு பெயர் என்பதைப் பற்றி இணைய தளம் ‘கோரா’வில் பல வித விளக்கங்கள் படிப்பதற்கு சுவையாக இருந்தது. அதில் ஒன்று 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட காலத்தில் ஒரு முறை தஞ்சாவூரின் கலெக்டருக்கு கும்பகோணத்தைச் சேர்ந்த ஒரு சமையற்காரர் அளித்த காஃபியை அவர் மிகவும் விரும்பி அருந்தியிருக்கிறார். அதற்குப் பிறகு அதே போன்ற காஃபியையே தனக்கு எல்லா இடங்களிலும் வழங்க வேண்டும் என்று decree (order) போட்டிருக்கிறார். அதனாலேயே அந்த காஃப்பிக்கு கும்பகோணம் டிக்ரி காஃபி என்று பெயராம்.

மதுரை மாட்டுத்தாவணி அருகே ஒரு பள்ளிக்குச் சென்று திரும்பும் வழியில் பாதையோரத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த சில குடும்பங்கள் ‘பிளாஸ்டர் ஆஃப் பாரிசி’ல் செய்யப்பட்ட அழகிய கொலு பொம்மைகளை விலைக்காக வைத்திருந்தார்கள். அதில் நான்கைந்து பொம்மைகளை வாங்கிக்கொண்டேன். பல பத்தாண்டுகளாக தமிழ் நாட்டிலேயே இப்படி பாதையோரத்தில் வசித்துக்கொண்டு அவர்கள் பொம்மைகள் தயாரித்து வருவதாக அங்கே என்னுடன் பேரம் பேசிய சிறுவன் கூறினான். அவனுக்கு பன்னிரண்டு வயதிருந்தால் அதிகம். அவனுடன் நான் ஹிந்தியிலேயே பேசினேன்.  ஒரு சிறுவனுடன் பேரம் பேசுவதற்கு எனக்குக் கூச்சமாகத்தான் இருந்தது. இருந்தும் இரட்டிப்பாக விலை சொல்கிறானோ என்று எனக்கு ஒரு சந்தேகம். பேரம் பேசியதில் சுமார் நாற்பது சதவிகிதம் விலையைக் குறைத்துக் கொண்டான். ‘ஏம்பா, நீ பள்ளிக்குப் போவதில்லையா’ என்று கேட்டதற்கு ‘ஓ, போகிறேனே, எங்கள் ராஜஸ்தானில். அப்பப்போ விடுமுறை எடுத்துக்கொண்டு விடுவேன்’ என்றான். கூடவே ஒரு சிறுமியும் வந்து விட்டாள். பொம்மைகளை வாங்கிக்கொண்டு காரில் ஏற்றிக்கொண்டு கிளம்பும்பொழுது அந்தச் சிறுவன் ‘சார், டீக்கு பணம் கொடுங்க சார்’ என்றான். அவன் கேட்ட விதம் மனதை நெருடியது. ‘ஏம்பா, எல்லாத்துக்கும் சேர்த்துதானே பணம் கொடுத்தேன்’ என்றேன். ‘இல்லை, சார். அந்தப் பணம் அந்தப் பெரியவருக்குப் போய் விட்டது. எனக்கு டீ குடிப்பதற்குப் பணம் கொடுங்க சார்’ என்றான். ஒரு முப்பது ரூபாயைக் கொடுத்த போது ‘ரொம்ப நன்றி, சார்’ என்றான். காரை ஓட்டிக்கொண்டு வந்தபோது இது போன்ற உழைப்பாளிகளிடம் பேரம் பேசியது தவறோ என்று என் மனம் மீண்டும் மீண்டும் குத்திக் காட்டியது.

ஒரு அவசர வேல நிமித்தமாக மீண்டும் தென்காசிக்குத் திரும்ப வேண்டியிருந்தது. வீட்டிற்குச் சென்று பார்த்தால் கிணற்றில் தண்ணீரில்லை. குழாயின் ஆழத்துக்கும் கிழே தண்ணீர் இறங்கி விட்டது. அடுத்த வாரம் தென்காசிக்கு நிரந்தரமாக மீண்டும் திரும்பும்பொழுது எப்படி சமாளிப்பது என்ற கவலை தொற்றிக் கொண்டது. யாரிடம் பேசினாலும் தண்ணீர் பிரச்சினையைப் பற்றித்தான் பேசுகிறார்கள். மூன்று மாதமாக தென்காசியில் சொட்டு மழை இல்லை. விவசாய நிலங்கள், ஏரிகள், குளங்கள், கிணறுகள் எல்லாம் காய்ந்து கிடக்கின்றன. வடகிழக்கு பருவ காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்து தாமிரபரணி ஆற்றின் தண்ணீர் வீணே கடலில் கலக்கிறது. மழை பெய்யாத காலங்களில் பல ஏரிகளையும், குளங்களையும் சீர் செய்யலாம்.  மழை பெய்யும் பொழுது உதவியாக இருக்கும். மக்களுக்கோ அரசாங்கத்துக்கோ இதைப் பற்றியெல்லாம் நினைத்துப் பார்ப்பதற்கு நேரம் இருப்பது போலத் தெரியவில்லை. எங்கள் வீட்டைச் சுற்றி வீட்டுக்குள் யாருக்கும் குடிதண்ணீர் கிடைக்காதது பற்றி இரண்டு முறை பஞ்சாயத்து நிர்வாக அதிகாரியிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தக் கதை தமிழ் நாட்டின் பல இடங்களில் நடக்கிறது என்பது உண்மை. அவர்களுக்கு எது எதைப் பற்றியெல்லாமோ கவலைப்பட வேண்டியிருக்கிறது … தேர்தல்கள், காவிரி மேலாண்மை வாரியம், தலைவர்/தலைவியின் உடல் நிலை அல்லது அவர்களின் குடும்பப் பிரச்சினை … இப்படிப் பலவற்றின் நடுவே சாதாரண மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை கவனிப்பதற்கு எங்கே நேரம். தமிழ்நாட்டின் தலையெழுத்து.

அன்றைக்கு ஜெயகாந்தன் எழுதிய ‘பிரம்மோபதேசம்’ என்ற இரண்டு  நீண்ட சிறு கதைகள் அடங்கிய புத்தகத்தைப் இந்த வாரத்தில் படித்து முடித்தேன். அதில் முதல் கதை ‘பிரம்மோபதேசம்’. இதில் சாஸ்திரங்களை கடுமையாக பின் பற்றும் ஒரு பிராமணரின் மகள் சாஸ்திரங்களை கடுமையாக எதிர்க்கும் கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்ட ஒரு இளைஞனுடன் அவரை மீறி திருமணம் செய்துகொள்ள முனைப்படுகிறாள். அதே நேரத்தில் கோவிலில் தேவாரம் பாடும் எந்த ஜாதியையோ சேர்ந்த இன்னொரு இளைஞருக்கு அவருடைய கட்டுப்பாடான, நெறி தவறாத பண்புகளைக் கண்டு அந்த பிராமணர் பூணுல் அணிவிக்கிறார். ஜெயகாந்தன் காலத்தில் அவர் எழுதிய பல கதைகள் பிராமணக் குடும்பங்களைப் பற்றியது என்று ஞாபகம். பிராமண குடும்பங்களில் பல அவலங்களைப் பற்றி துணிந்து எழுதியிருக்கிறார். அவரது எழுத்துக்களை மிக அதிகமாக ரசித்தவர்களும் பிராமணர்கள்தான் என்பது என் கருத்து. பிராமணர்களின் பண்பாடுகளால் ஈர்க்கப்பட்டு அப்படி கதைகளை அமைத்தாரா அல்லது பிராமணர்களின் பல பழக்க வழக்கங்களை எதிர்ப்பதாக நினைத்து எழுதினாரா என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்யலாம். மேலும் கம்யூனிசத்தை மிகவும் விரும்பியவர் அவர். இரண்டாவது கதை ‘இலக்கணம் மீறிய கவிதை’ இதில் ஒரு வேசி தன் தொழிலின் நிர்பந்தத்துக்காக செய்யக்கூடிய பல செயல்களை மீறி எப்படி அதே தொழிலில் தனக்குப் போட்டியாக இருக்கும் இன்னொருத்திக்கு உதவி செய்கிறாள். அந்த வேசியால் ஈர்க்கப்பட்ட இலக்கணத்தை மீறி கவிதை எழுதும் ஒருவர் எதிர்பாராமல் அதற்கு எப்படி துணை போகிறார் என்பது பற்றிய கதை. ஜெயகாந்தன் பல கதைகளில் வேசிகளைப் பற்றியும் வாழ்க்கையில் தடம் புரண்ட சில குடும்பப் பெண்மணிகளைப் பற்றியும் நிறைய எழுதியிருக்கிறார் என்று ஞாபகம்.

இரண்டு கதைகளும் இன்றைக்கும் படிப்பதற்கு நன்றாகவே இருந்தது.

அடுத்ததாக நான் படித்துக்கொண்டிருப்பது “HEALTHY MIND, HEALTHY BODY: NEW THOUGHTS ON HEALTH” என்ற ராமகிருஷ்ண மடத்தின் வெளியீட்டில் வந்த ஒரு புத்தகம். இன்னும் முடிக்கவில்லை.  உடம்பு ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியமான மனது தேவை என்பதைப் பற்றி எங்கள் அம்மா பகவானின் பல நிகழ்ச்சிகளில் கேட்டு உணர்ந்திருக்கிறேன். கோபம், பொறாமை, காழ்ப்புணர்ச்சி, பழி தீர்க்கும் மனோபாவம், குற்ற உணர்ச்சி, ஏமாற்றம், வெட்க உணர்ச்சி, தன்மானமின்மை, இப்படி மனதின் பல வியாதிகள்தான் உடம்பில் பல பகுதிகளில் வியாதிகளாக பெரும்பாலும் தோன்றுகின்றன என்பதை நான் முழுவது நம்புகிறேன். ஆனால், மனதின் வியாதிகளிலிருந்துதான் விடுபட முடியவில்லை. ஒரு சில ஆன்மீக வகுப்புகளுக்குப் போகும்பொழுது ஏதோ கொஞ்சம் இந்த வியாதிகளிலிருந்து விடுபடுவதுபோலத் தோன்றுகிறது ஆனால் அந்த வகுப்புகள் முடிந்து மீண்டும் அன்றாட அல்லல் வாழ்க்கையில் உழலும்போது மீண்டும் இந்த வியாதிகள் தங்கள் பலத்தைக் காட்டுகின்றன. நிரந்தரமாக விடுதலையடைவதற்கு பயிற்சி செய்யவேண்டும். ஆனால் ஒரு நாளில் பல வேலைகளுக்கு நடுவே இந்தப் பயிற்சிகளுக்கு மட்டும் நேரம் ஒதுக்குவதற்கு முடிவதில்லை. நம்முடைய முக்கியத்துவங்கள் எவை என்பதைப் பற்றி நாம் பொதுவாக சிந்தித்துப் பார்ப்பதில்லை என்று நினைக்கிறேன். தினப்படி வாழ்க்கையை ஒரு விழிப்புணர்ச்சியோடு நடத்தி வருவதில்லை. இந்தப் புத்தகத்தைப் படிக்கும் பொழுது மீண்டும் மனதில் ஒரு தீர்மானத்தை எடுத்துக்கொள்கிறேன். தீர்மானத்தைத் தொடரவேண்டும்.

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவாக தொலைக்காட்சி  நிகழ்ச்சிகளை பார்ப்பதை நான் தவிர்த்து வருகிறேன். முன்பெல்லாம் தூர்தர்ஷனின் ஒரு சேனல் மட்டுமே இருந்த காலங்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவ்வளவு விளம்பரங்கள் நடு நடுவே வருவதில்லை. ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சிகளை மட்டும் இந்தியாவில் இருக்கும் பொழுது தவறாமல் பார்த்து விடுவேன். முன்பெல்லாம் திரைப் படங்களை மிகவும் விரும்பிப் பார்த்தவன் நான். ஆனால், இப்பொழுது வெளியாகும் பல படங்கள் என்னை ஈர்ப்பதில்லை. ஒரு சில பிரபலங்கள் நடித்த ஒரு சில படங்களைப் பார்த்த போதிலும் அவற்றில் பெரும்பாலும் குறைகளையே அதிகமாக கண்டிருக்கிறேன். ‘உனக்கு வயதாகி விட்டது. உன்னுடைய ரசனை மாறிப் போனால் யாரைக் குற்றம் சொல்ல முடியும்’ என்று சென்னையில் வசிக்கும் என் தம்பி சொல்கிறான். நேற்று இரவு சாப்பிட்டு முடித்த பிறகு உடனடியாக வேறு எதுவும் செய்வதற்க்கு இல்லாத நேரத்தில் தொலைக்காட்சிப் பெட்டியை ‘ஆன்’ செய்ததில் ‘ராசுக்குட்டி’ என்ற பாக்கியராஜ் படம் ஓடிக்கொண்டிருந்தது. பல பாக்கியராஜ் படங்களை விரும்பிப் பார்த்திருக்கிறேன். பொதுவாக பல படங்களில் ஒன்றும் அறியாத சாது போல வருவார். ஒரு பெண்ணை விரும்புவார். பல குழப்பங்கள் வரும். நடு நடுவே நன்கு சிரிக்கக்கூடிய விரசமில்லாத (ஒரு சில நேரங்களில் விரசமான) நகைச்சுவைக் காட்சிகள் வரும். பல வித்தியாசமான திருப்பங்கள் இருக்கும். இப்படி ஒரு கூட்டுக் கலவையாக ஜனரஞ்சகமாக படம் போகும். அப்படித்தான் ‘ராசுக்குட்டி’யும் இருந்தது. பொழுது போனது தெரியவில்லை. பாக்கியராஜைப் போல விசுவின் படங்களும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
          
          மதுரை நகரம் எனக்குப் பிடிக்காது என்று ஏற்கெனவே கூறியிருக்கிறேன். இருந்தும், மதுரை ஒரு அதிசயமான ஊர் என்பதை நான் ஒத்துக்கொண்டாக வேண்டும். கடந்த வாரத்தில் ஒரு நாள் என் பேரனுக்காக பொம்மை வாங்க இணையதளத்திலிருந்து ஒன்றிரண்டு பொம்மைக் கடைகளின் விலாசத்தைத் தெரிந்துகொண்டு மதுரை ஊருக்குள் சென்றேன். ‘அப்பப்பா!’ மேல ஆவணி மூல வீதியிலும் அதற்கருகிலும்தான் எவ்வளவு கடைகள். எவ்வளவு சந்துகள். வித விதமாக என்னென்னவோ பொருட்கள் வாங்கலாம். எல்லாவற்றையும் கூட வாங்கலாம் என்று கவரக்கூடிய கடைகள். தீபாவளி வேறு நெருங்கிக் கொண்டிருக்கிறது. கையை இறுக்கக் கட்டிக்கொண்டு பல ஈர்ப்புகளையும் தாண்டி (நான் தேடிய பொம்மைகள் கிடைக்கவில்லை.) வேறு ஒன்றிரண்டு பொருட்களை மட்டும் வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். டில்லியில் அஜ்மல்கான் ரோட்டிலும் சாந்தினி சௌவுக்கிலும் இது போன்ற ஈர்ப்புகளை அனுபவித்திருக்கிறேன்.

                                                                                    … தொடரும்

No comments:

Post a Comment